எந்த இலக்கிய படைப்பாக இருந்தாலும் அதைத் திரைப்படமாக எடுப்பது சவாலான விசயம். மம்முட்டியும் ,அடூர் கோபாலகிருஷ்ணனும் இணைந்து இந்தச் சவாலில் வென்றிருக்கிறார்கள், 1990ல். உண்மையிலேயே இந்தத் திரைப்படத்தைக் காண்பது அலாதியான அனுபவம். 'மதிலுகள்' என்ற இந்த வைக்கம் முகமது பஷீரின் குறுநாவலை நீங்கள் வாசித்து இருந்தாலும், வாசிக்கவில்லை என்றாலும் கூட இந்தத் திரைப்படம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
படமாக்கப்பட்ட விதம் அற்புதம். இப்படி ஒரு சிறை இருந்தால் நாமும் சென்று அங்கு தங்கி விடலாம் என தோன்றும் அளவிற்கு காட்சிகளை படம்பிடித்து இருக்கிறார் இயக்குநர், அடூர் கோபாலகிருஷ்ணன் அவர்கள். பஷீரின் எழுத்துகள் பாசாங்கில்லாதவை. சக மனிதர்கள் மீதான அன்புதான் அவரது பேசுபொருள். அப்படிப்பட்ட எழுத்தை திரையில் கொண்டுவருவதற்கு நிறைய உழைக்க வேண்டியிருந்திருக்கும், உழைத்திருக்கிறார்கள்.
மம்முட்டி ஒரு தேர்ந்த நடிகர். எந்த மாதிரியான கதாப்பாத்திரத்திலும் தன்னை பொருத்திக் கொள்ளும் திறமையுடையவர். கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் வெளிவந்த திரைப்படங்களிலும் கூட நாம் இதைக் காண முடியும். பஷீர் எனும் ஆளுமையை திரையில் கொண்டு வர நிறைய மெனகெட்டிருக்கிறார். பஷீராக மட்டுமே திரையில் தெரிய உழைத்திருப்பது நன்றாகவே தெரிகிறது. மம்முட்டி இப்போது இந்தத் திரைப்படத்தைப் பார்த்தால் கூட திரும்பவும் இப்படியான சூழலில் மீண்டும் நடிக்கவே விரும்புவார். இத்திரைப்படம் படமாக்கப்பட்ட இடம் அவ்வளவு அழகானது.
பஷீர்- நாராயணி பகுதி எல்லாம் கவிதை. நாராயணி குரல் ' எந்தோ.. ' என தொடங்குவது இப்போதுவரை காதில் கேட்கிறது. 2023ல் வெளிவந்த ' மகாராணி ' திரைப்படத்தில் கூட இப்படியான ஒரு பகுதி இருக்கும். ராணி கதாப்பாத்திரத்தின் குரலை மட்டுமே திரைப்படத்தின் இறுதிகாட்சி வரை நம்மால் கேட்க முடியும். இறுதியில் மட்டுமே ராணியின் முகம் தெரியும். ஆனால் நாராயணியின் முகம் இன்று வரை நமக்கு தெரியவே தெரியாது. அந்த ராணி கதாபாத்திரமும் உரையாடலை ' எந்தோ டா..' என்றே தொடங்கும். இந்தக் கதாப்பாத்திரத்திற்கு ' மதிலுகள்- நாராயணி ' ஒரு முன்மாதிரிமாக இருந்திருக்கக்கூடும். சக மனிதர் மீதான நேசத்திற்கு, அன்பிற்கு, காதலுக்கு மதில் கூட தடையாக இல்லை.
எல்லோரையும் நல்லவர்களாக, எல்லாவற்றிலும் நல்லதை மட்டுமே காணக் கூடியவர்களாக, எதையும் எதிர்கொள்பவர்களாக இருக்கும் வைக்கம் முகமது பஷீர், பிரபஞ்சன் போன்றவர்களின் மனங்கள் நமக்கெல்லாம் வாய்க்க வேண்டும்.
ஒரு மென்மையான திரையனுபவத்திற்கு 'மதிலுகள்' திரைப்படத்தைக் காணலாம். YouTube -ல் காணக்கிடைக்கிறது.
மேலும் படிக்க :